திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து தர்ம சக்தி-பாரத் சேனா சார்பில் திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக நகரில் 8 இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து தாரை, தப்பட்டை முழங்க சிலை ஊர்வலம் தொடங்கியது.

இதில் இந்து தர்ம சக்தி தலைவர் நித்ய சத்வானந்தா, மாநில செயலாளர் மாணிக்கம், பாரத் சேனா மாநில தலைவர் செந்தில்கண்ணன், சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி, காசி விஸ்வநாதர் யாத்திரை குழு தலைவர் சிவகுரு முருகன், இந்து தர்ம சக்தி மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திரன், தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊா்வலம்

இந்த சிலை ஊர்வலம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஏ.எம்.சி. சாலை, மெயின்ரோடு, மார்க்கெட் வழியாக கோட்டைக்குளத்தை சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்பட்டது. இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொடைரோடு, அம்மையநாயக்கனூர், ராஜதானிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதில் ெகாடைரோட்டில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

ஆற்றில் கரைப்பு

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம், சங்கால்பட்டி, சின்னம்மநாயக்கன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். வத்தலக்குண்டுவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர். அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் பெத்தானியபுரம், காந்திநகர், பஸ்நிலையம், மெயின்ரோடு வழியே சென்று குன்னுவாரன்கோட்டை வைகை ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.


Next Story