கார்த்திகை தீபத்திருவிழாவில் குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா
அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று காலை குதிரை வாகனங்களில் சந்திரசேகரரும், விநாயகரும் வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று காலை குதிரை வாகனங்களில் சந்திரசேகரரும், விநாயகரும் வீதி உலா வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் வீதிஉலாவும் நடக்கிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாள் விழாவான நேற்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. அதன்படி நேற்று முன்தினம் காலையில் விநாயகர் தேரும், அதனை தொடர்ந்து முருகர் தேரும் மாட வீதியை வலம் வந்தன. தொடர்ந்து மதியம் சுமார் 3.47 மணியளவில் அருணாசலேஸ்வரர் தேர் வீதி உலா தொடங்கியது.
இந்த தேர், மாட வீதியை சுற்றி இரவு சுமார் 11.42 மணியளவில் நிலையை வந்து அடைந்தது. அருணாசலேஸ்வரர் தேர் நிலையை வந்து அடைந்ததும் பக்தர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அப்போது சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் பராசக்தி அம்மன் தேர் மாட வீதியுலா வந்தது. இந்த தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்.
அதை தொடர்ந்து சிறுவர், சிறுமியர் சண்டிகேஸ்வரர் தேரை இழுத்து வந்தனர். பராசக்தி அம்மன் தேர் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் நிலையை வந்து அடைந்தது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் தொடர்ந்து வந்து நிலையை அடைந்தது. பஞ்சமூர்த்திகளின் தேர்கள் நிலையை வந்து அடையும் வரை ஆயிரகணக்கான போலீசார் தொடர்ந்து மாட வீதியில் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
குதிரை வாகனத்தில் சந்திரசேகரர்
தொடர்ந்து 8-ம் நாள் விழாவான நேற்று காலை 11.30 மணியளவில் குதிரை வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
முன்னதாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேர் முன்பாக சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் நின்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது.
மாலை 4.30 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. பிச்சாண்டவர் உற்வசத்தின்போது உண்டியலில் காணிக்கை செலுத்தினால் வியாபாரம் விருத்தியாகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி மாடவீதியில் பிச்சாண்டவர் உலா வந்தபோது திரளான பொதுமக்கள், வியாபாரிகள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் பிச்சாண்டவர் வந்ததும் வாணவேடிக்கை நடைபெற்றது.
நாளை மகா தீபம்
கோவிலுக்கு பிச்சாண்டவர் சென்ற பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனத்தில் மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழக்கமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று விடுமுறை நாள் என்பதாலும், தீபத் திருவிழா நடைபெற்று வருவதாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கட்டணம் மற்றும் பொது தரிசன வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக காடா துணிகள் மாடவீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவிலில் பூஜை நடைபெற்றது. மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவு போன்றவை நடைபெற்று வருகிறது.