விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை; இந்து அமைப்புகள் வெளிநடப்பு


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை;     இந்து அமைப்புகள் வெளிநடப்பு
x

நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் இருந்து இந்து அமைப்புகள் வெளிநடப்பு செய்தனர். பிற மதத்தினர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் இருந்து இந்து அமைப்புகள் வெளிநடப்பு செய்தனர். பிற மதத்தினர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்தனர்.

ஆலோசனை கூட்டம்

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு குறித்து கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதா, இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், தமிழ்நாடு சிவசேனா நிர்வாகிகள் வந்திருந்தனர். மேலும் இந்த கூட்டத்துக்கு கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தினரும் வந்திருந்தனர்.

வெளிநடப்பு

கூட்டத்தில் மாற்று மதத்தினரை கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கூறி இந்து அமைப்பினர் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்ட அரங்குக்கு வெளியே அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை.

இதற்கிடையே கலெக்டர் அரவிந்த், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்- கலெக்டர் அலர் மேல் மங்கை, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, தங்கராமன், சாம் வேதமாணிக்கம் மற்றும் தாசில்தார்கள் சேகர், சுப்பிரமணியம், வினோத், பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

10 இடங்களில் கரைக்க ஏற்பாடு

கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசுகையில் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. கன்னியாகுமரி, சின்னவிளை, சங்குத்துறை உள்ளிட்ட 10 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

சிலைகள் கரைக்கக் கூடிய பகுதிகளில் மின்விளக்கு வசதி செய்திருக்க வேண்டும். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தை அதற்கான வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒத்துழைப்பு

இந்த கூட்டம் முடிந்ததும் வெளிநடப்பு செய்த இந்து அமைப்புகளின் நிர்வாகிகளான அதாவது இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் அசோகன், கோட்ட செயலாளர் மிசா சோமன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், அகில பாரத இந்து மகாசபா மாநில துணைத்தலைவர் த.பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோரை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து மிசாசோமன் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கொண்டாடப்படும் விழா. இந்துக்களின் திருவிழாவான இதில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் தான் அழைத்து பேச வேண்டும். ஆலோசிக்க வேண்டும். பிற மதத்தினரின் விழா தொடர்பாக அதிகாரிகள் எங்களை அழைத்து பேசுவதில்லை. எனவே விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தில் மற்ற மதத்தினரை அழைத்து பேசக்கூடாது. விநாயகர் சதுர்த்தி பூஜை முதல் ஊர்வலம் வரை எங்களது ஒத்துழைப்பை அரசுக்கு அளிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story