விநாயகர் சதுர்த்தி விழா: ரசாயன கலவை பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது-கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்


விநாயகர் சதுர்த்தி விழா: ரசாயன கலவை பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது-கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரசாயன கலவைகள் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

சேலம்

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தியின்போது ரசாயன கலவை கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆன சிலைகளை பயன்படுத்த வேண்டும். ரசாயன கலவை பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது.

அனுமதி பெற வேண்டும்

மாநகராட்சி பகுதிகளில் விநாயகர் சிலைகள் நிறுவ போலீஸ் உதவி கமிஷனரிடம், ஊரக பகுதிகளில் உதவி கலெக்டர்களிடம் அனுமதி பெற வேண்டும். மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவக்கூடாது. மாசு கட்டுபாட்டு வாரியத்தால் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும்.

.மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது. எனவே விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் வீர பிரதாப் சிங், போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story