குமரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அபிஷேகம், தீபாராதணை மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் ரெயில் நிலைய குட்செட் அரசடி பால விநாயகர் கோவில் ,மீனாட்சிபுரம் அற்புத விநாயகர் கோவில், கோட்டார் செட்டு நயினார் தேசிக விநாயகர் தேவஸ்தான கோவில், வடசேரி விஜய கணபதி கோவில் ஆகிய விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும், யாகமும் நடந்தது.
அதே சமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல் மாலை அணிவித்து, அவல், பொரி மற்றும் கொழுக்கட்டை படைத்து வழிபட்டார்கள்.
சிலைகள் பிரதிஷ்டை
இதே போல இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிவசேனா ஆகியவை சார்பில் பொது இடங்களிலும், கோவில்களிலும் 1,600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதே சமயம் பொது இடங்களிலும், கோவில்களிலும் 2 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள் ளது. இந்த பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். முக்கியமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விநாயகர் சிலைகள் உரிய அனுமதி வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று முன்தினம் இரவு நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார். வழுக்கம்பாறை பகுதியில் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையும் நடத்தினார். அதோடு தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.