விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம்


விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரம்
x

திருவாரூரில், விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கான சிலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து சகஜநிலை திரும்பியுள்ளதால் இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) வருகிறது. விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் திறந்தவெளி வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தயார்நிலையில் சிலைகள்

இதுஒருபுறம் இருக்க திருவாரூர் சேந்தமங்கலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் தொழிலாளி புறான் என்பவர் தனது குடும்பத்தினருடன் இங்கு தங்கியிருந்து விதவிதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறார். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பாகவே சிலைகள் தயாரிக்கும் பணிகளை அவரது குழுவினர் தொடங்கி விட்டனர். கிழங்கு மாவினை கொண்டு 10 அடி உயரம் முதல் பல்வேறு உயரங்களில் அவரது குழுவினர் சிலைகளை தயாரித்துள்ளனர்.

ரசாயன பொருட்கள் இன்றி...

இதுகுறித்து வடமாநில தொழிலாளி புறான் கூறுகையில், சாமி சிலைகள், திருஷ்டி பொம்மைகள் என அனைத்து விதமான பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் சிலைகளை தயாரித்து உள்ளோம். இந்த சிலைகளின் வியாபாரத்தை கொண்டுதான் அந்த ஆண்டின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவினால் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று இல்லாததால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகளை தயார் செய்துள்ளோம். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிதில் கரையக்கூடிய வகையில் ரசாயன பொருட்கள் இன்றி கிழங்கு மாவை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. கை, கால், உடல், தலை என தனித்தனியாக தயாரித்து அதனை இணைத்து சிலை உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகளில் பெரும்பாலானவை விற்று விட்டதால் மகிழ்ச்சியாக உள்ளோம் என்றார்.



Next Story