விநாயகர் சிலை குடோன் மூடப்பட்டது


விநாயகர் சிலை குடோன் மூடப்பட்டது
x

பாளையங்கோட்டையில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி அதிகாரிகள் குடோனை மூடினார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி அதிகாரிகள் குடோனை மூடினார்கள்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ரசாயன கலப்பு கொண்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

குடோன் மூடப்பட்டது

இந்த நிலையில் நேற்று மாலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு சென்றனர். பசுமை தீர்ப்பாய உத்தரவை மேற்கோள் காட்டி விநாயகர் சிலைகள் இருக்கும் குடோனை இரும்பு தகடுகள் கொண்டு மூடினார்கள்.

சிலை தயாரிப்பு கூடத்திலேயே வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் அவர்கள் வெளியே சென்று வருவதற்கு மட்டும் சிறிய வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இதையொட்டி பாரதிய ஜனதா கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயார் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபடுவதற்காக செய்யப்பட்ட சிலைகளை விற்பனைக்கு வழங்காமல் தடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்தும், உடனடியாக தயாரித்து வைத்துள்ள சிலைகளை விற்பனைக்கு வழங்க கோரியும் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் நடைபெறுகிறது" என்று கூறியுள்ளார்.


Next Story