பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் ரங்கசமுத்திரம், வடக்குப்பேட்டை, கோட்டூவீராம்பாளையம், கடைவீதி, கொளத்தூர் உள்பட நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 45 இடங்களில் இந்து முன்னணி மற்றும் தனியார் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சத்தியமங்கலம் நகரிலேயே 9 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை ரங்கசமுத்திரம் மேட்டுப்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள பாலவிநாயகர் கோவில் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர்.
மேலும் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 35 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு டிராக்டர், வேன், ஆட்டோ, லாரி ஆகிய வாகனங்களில் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னர் பகுதிக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு ரங்கசமுத்திரம், சின்ன வீதி, கடைவீதி, பெரிய பள்ளிவாசல் வீதி, வன்னியர் வீதி, திப்பு சுல்தான் ரோடு, வடக்கு பேட்டை வழியாக வந்து சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றை சென்றடைகிறது. இதைத்தொடர்ந்து அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
பெருந்துறை
பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை முனியப்பன் கோவில் வளாகத்தில், 7 அடி உயர விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவிலில் நேற்று மொத்தம் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த சிலைகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலம் பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அந்தியூர்- பவானி
அந்தியூர் பஸ் நிலையம் அருகே 10 அடி உயரம் கொண்ட ராஜகணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பவானியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தேர் வீதி, தினசரி மார்க்கெட் வீதி, பாவடி திடல் அருகே உள்ள பழனிபுரம், வர்ணபுரம் உள்பட பவானி நகரில் மொத்தம் 64 இடங்களில் பொதுமக்கள் சார்பிலும், இந்து முன்னணி சார்பில் ஒரு இடத்திலும் என மொத்தம் 65 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொழுக்கட்டை, அவல் போன்றவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று 30 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பவானி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. மீதம் உள்ள சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
கொடுமுடி
விநாயகர் சதுர்த்தியையொட்டி கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரிஷப வாகன, புலி வாகன, மூஞ்சூர் வாகன விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் முன்பு 9 அடி உயரம் உள்ள ரிஷப வாகன விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் எல்லையூர் ரெயில்வே கேட் பகுதிக்கு அருகில் 7 அடி உயரம் உள்ள புலி வாகன விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து முன்னணி சார்பில் 15 சிலைகளும், பொதுமக்கள் சார்பில் 15 சிலைகளும் வைக்க கொடுமுடி போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல் மணிக்கூண்டு சித்தி விநாயகர், காங்கேயம் சாலை ராஜகணபதி கோவில், மார்க்கெட் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் மற்றும் ெகாடுமுடி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டார்கள்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி, சலங்கபாளையம், மின்ன வேட்டுவம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியாக்கவுண்டன்வலசு, மாணிக்காவலசு, அய்யன்வலசு, குட்டிபாளையம், பெருந்தலையூர் கவுண்டம்பாளையம் உள்பட 27 இடங்களில் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் சார்பாக எடுத்து செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.