விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x

கரூர் மாவட்டத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கரூர்

விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு குளித்தலை நகரம் மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. குளித்தலை நகரப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் கரைக்கப்பட்டது.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், புன்னம் சத்திரம், தவிட்டுப்பாளையம்,நஞ்சை புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31-ந்தேதி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் நேற்று முன்தினம் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 11 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தவிட்டு்ப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 27 விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து கிரேன் மூலம் சிலைகள் தூக்கி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி சந்தோஷ் குமார் தலைமையில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தோகைமலை

தோகைமலை ஒன்றியத்திற்குட்ட 22 ஊராட்சிகளிலும் 36-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதையடுத்து அனைத்து சிலைகளும் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. இதேபோல் தோகைமலையில் மெயின் சாலையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை பெண்கள் முளைப்பாரியுடன் முன்னால் செல்ல ஊர்வலமாக சிலை எடுத்து செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகைமலை போலீசார் செய்திருந்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம், புகழிமலை அடிவாரம், பாலத்துறை, அய்யம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் உள்ளிட்ட 30 இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூைஜகள் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று அனைத்து ஊர்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புகழிமலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைககள் நடந்தது. பின்னர் அங்கிருந்து புகழூர் 4 ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story