இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஊர்வலம் சென்ற பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஊர்வலம் சென்ற பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விநாயகர் சதுர்த்தி

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பிலும் மற்றும் வீடுகள், கோவில்கள் உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன.

அந்த விநாயகர் சிலைகள் 2-ந்தேதியில் இருந்து அந்தந்த இந்து அமைப்புகள் சார்பில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2-ந்தேதி சிவசேனா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி கடலிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்பட்டன. நேற்று முன்தினம் குமரி மாவட்டம் முழுவதும் இந்து மகாசபா சார்பில் 1,008 விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடற்கரையில் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி

3-வது நாளான நேற்று இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடல் மற்றும் ஆறுகள் உள்பட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டடன.

நாகர்கோவில் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் மொத்தம் 151 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. மேலும் பா.ஜனதா சார்பில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலைகள் அனைத்தும் நேற்று மதியம் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு பக்தி பாடல்கள் ஒலித்தபடி நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடந்தது. பின்னர் நாகராஜா திடலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது.

சிலைகள் கரைப்பு

ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் தெய்வபிரகாஷ் மற்றும் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் மிசா சோமன், மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா, ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் மார்த்தாண்டன், மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து புறப்பட்டு ஒழுகினசேரி, வடசேரி சந்திப்பு, மணிமேடை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், வேப்பமூடு சந்திப்பு, செட்டிகுளம், சவேரியார் கோவில் சந்திப்பு, ஈத்தாமொழி சந்திப்பு, பீச் ரோடு சந்திப்பு வழியாக சங்குத்துறை கடலுக்கு கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட்டன.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம்

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊர்களிலும் 108 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. அந்த சிலைகள் அனைத்தும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சுசீந்திரத்துக்கு மினி லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. 3 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன்பு இருந்து 108 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டன.

இதற்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவா வரவேற்று பேசினார். சாமி தோப்பு அன்பாலயா நிறுவனர் சிவச்சந்திர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஊர்வலத்தை ஒன்றிய பொருளாளர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

மாவட்ட இந்து முன்னணி முன்னாள் பொருளாளர் திரவியம், ஒன்றிய துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு வழுக்கம்பாறை, பொற்றையடி, கொட்டாரம், விவேகானந்தபுரம் சந்திப்பு வழியாக மாலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையை அடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் எஸ்.பி.அசோகன், ஒன்றிய இந்து முன்னணி துணை தலைவர் வேலாயுதம் ஆகியோர் பேசினர். பின்னர் 108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்த சங்க தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். முடிவில் ஒன்றிய துணை தலைவர் பொன்பாண்டியன் நன்றி கூறினார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை யொட்டி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தோவாளை ஒன்றியம்

தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊர்களில் இந்து முன்னணி சார்பில் 48 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் தோவாளை முருகன் கோவில் நுழைவுவாயில் முன்பு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு ஒன்றிய இந்து முன்னணி துணை தலைவர் ஆரல்முருகன், மாவட்ட அமைப்பாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஒன்றிய செயலாளர் கண்ணன் மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில செயலாளர் வத்தில் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். ஊர்வலத்தை இதிகாச சங்கடை சமிதி மாநில தலைவர் சிவ.சுப்பிரமணியபிள்ளை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சொக்கலிங்கம், கிருஷ்ணன், இசக்கிமுத்து, பத்மநாபபிள்ளை, சுடலைமுத்து, விசுவ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் தோவாளையில் இருந்து புறப்பட்டு ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், கண்ணன்புதூர், சோழபுரம், புளியன்விளை, சந்தை விளை, தாழக்குடி, வீரநாராயணமங்கலம், இறச்சகுளம், பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சிறமடம் வழியாக ஞாலம் சென்று அங்குள்ள பள்ளிகொண்டான் அணையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போலீசார் ரோந்து

இதேபோல் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா சார்பில் திங்கள்நகர், செருப்பாலூர், வைகுண்டபுரம், மேல்புறம், மார்த்தாண்டம் பம்மம், முன்சிறையில் அஞ்சு கண்ணு கலுங்கு, கூனாலுமூடு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இதையொட்டி, மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்காங்கே போலீசார் வாகனத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story