வேலூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்


வேலூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்
x

வேலூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை உள்ளது. நீர்நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்குமாவு, மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகள் கரைக்கும் இடங்கள்

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும். வேலூர் சதுப்பேரி, ஊசூர் ஏரி, கருகம்புத்தூர் ஏரி, குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story