ஊட்டியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்
ஊட்டியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஊட்டி,
ஊட்டியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
170 சிலைகள்
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஊட்டி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 170 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஊட்டி வட்டாரத்தில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊட்டியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் ஊட்டி அருகே உள்ள காமராஜ் சாகர் அணையில் கரைக்கப்பட உள்ளது.
கொடி அணிவகுப்பு
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, போலீசார் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடைபெற்றது. காந்தல் முக்கோணத்தில் இருந்து பென்னட் மார்க்கெட் வழியாக ரோகிணி சந்திப்பு வரையும், ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, லோயர் பஜார், மத்திய பஸ் நிலையம் வரை கொடி அணிவகுப்பு வரை நடந்தது. இதற்கு ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
வஜ்ரா வாகனத்துடன் அதிரப்படை, ஆயுதப்படை போலீசார் கலந்துகொண்டனர். ஊட்டியில் இன்று (சனிக்கிழமை) சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 35 விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்து முன்னணி சார்பில் 135 சிலைகள் கரைக்கப்பட உள்ளது. முன்னதாக விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சீருடை அணியாத போலீசார் ஊர்வலத்தை கண்காணிக்க உள்ளனர்.
ஏற்பாடுகள்
காமராஜ் சாகர் அணையில் சிலைகளை கரைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் சிலைகளை கரைக்க உள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.