துணிக்கடையை பொக்லைன் எந்திரத்தால் இடித்து தள்ளிய கும்பல்: பொருட்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு


துணிக்கடையை பொக்லைன் எந்திரத்தால் இடித்து தள்ளிய கும்பல்: பொருட்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு
x

நாகர்கோவிலில் உரிமையாளரை கட்டிப்போட்டு துணிக்கடையை பொக்லைன் எந்திரத்தால் இடித்து தள்ளிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி புளியவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற சீத்தா முருகன். நாகர்கோவில் தி.மு.க முன்னாள் கவுன்சிலராகவும், முன்னாள் நகர துணை செயலாளராகவும் இருந்தவர். வடசேரி அசம்பு ரோட்டு பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் இவர் துணிக்கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சீத்தா முருகன் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து நள்ளிரவில் பொக்லைன் எந்திரத்துடன் 4 பேர் கொண்ட கும்பல் அந்த துணிக்கடை அருகே வந்தது. பின்னர் அவர்கள் திடீரென கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் கடையின் ஷட்டரை உடைத்தனர். மேலும் பொக்லைன் எந்திரத்தை கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து கடையை சேதப்படுத்தினர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் கண்டனர்.

கட்டிப்போட்டு தாக்குதல்

ஆனாலும் அந்த கும்பல் கடையை இடித்து சேதப்படுத்துவதில் மும்முரமாக இருந்தது. இதுபற்றி சீத்தா முருகனுக்கு சிலர் தகவல் தெரிவித்தனா். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்தார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கடை முன்பு அவரது கைகளை கட்டிப் போட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், அங்கிருந்த மின்சாதனப் பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சீத்தாமுருகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாடகை கட்டிடத்தை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் மற்றும் கடை இடிப்பு சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும் அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.


Next Story