போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் உத்தரவு
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
சேலம்,
போலீஸ்காரர் மீது தாக்குதல்
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு கடந்த 15-ந் தேதி போக்குவரத்து போலீஸ்காரர் பாண்டியன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பொன்னம்மாபேட்டை தாண்டவர் நகரை சேர்ந்த கோகுல்ராஜன் (வயது 23) என்பவர் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாமல் செல்போன் பாத்தப்படி வந்ததால் ஆட்டோ மீது மோதியதாக தெரிகிறது.
பின்னர் அவர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதை கவனித்த பாண்டியன் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார். அப்போது ஆத்திரமடைந்த கோகுல்ராஜன் போலீஸ்காரரர் பாண்டியனை தவறாக பேசியதுடன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாண்டியன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
குண்டர் சட்டத்தில் கைது
இதுதொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் தம்பி மகன் என்பதும், இவர் மீது அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோகுல்ராஜனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கோகுல்ராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலித்து கோகுல்ராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள கோகுல்ராஜனிடம் வழங்கப்பட்டது.