கொடூர தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொடூர தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

சிறுமியை துன்புறுத்தி கொலை செய்த கொடூர தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டி களத்து வீட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (31). விவசாயி. அவருடைய மனைவி கீர்த்திகா (23). இவர்கள் 2 பேரும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனா். அப்போது அருகில் வசித்த 4 வயது சிறுமியுடன் இவர்கள் பழகினர்.

இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி கணவன்-மனைவி 2 பேரும் செங்குளத்துப்பட்டியில் உள்ள தங்களது வீட்டுக்கு அந்த சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு ராஜேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. மேலும் ராஜேஷ்குமாரின் மனைவி கீர்த்திகா சிறுமியின் உடலில் சூடு வைத்து கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ்குமார், கீர்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொடூர தம்பதியின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story