கொலை, கொள்ளை என 40 வழக்குகளில் தொடர்புடையபிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை, கொள்ளை என 40 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சிதம்பரம் போலீசார் சம்பவத்தன்று முத்துமாணிக்க நாடார் தெரு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு போலீசாரை கண்டதும் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 1½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிதம்பரம் அடுத்த கே.ஆடூரை சேர்ந்த முத்துகுமரன் மகன் சிவா என்ற சிவராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
40 வழக்குகள்
கைதான சிவா மீது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிதம்பரம் நகர், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, சென்னை மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், ஓட்டேரி, பொறையார், புதுப்பட்டினம், சீர்காழி அம்மாபேட்டை, ஆவுடையார்கோவில் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் என மொத்தம் 40 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவாவிடம், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.