பாலியல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பாலியல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பாலியல் வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது

தஞ்சாவூர்

கும்பகோணம் பாரதிநகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (வயது 37). இவர், 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதேபோல் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் மொழையூர் கீழத்தெருவை சேர்ந்த மணி மகன் மனோஜ் என்பவர் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஆனந்த்பாபு, மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

பின்னர் இவர்கள் இருவரும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து ஆனந்த்பாபு, மனோஜ் ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆனந்த்பாபு, மனோஜ் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.





Next Story