கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கைதான கணவன், மனைவி உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கைதான கணவன், மனைவி உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கணவன்-மனைவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கமாயன் (வயது42). இவருடைய மனைவி ஒச்சம்மாள் (32). அதே பகுதியை சேர்ந்தவர் அய்யர்சாமி (20). இவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம் ரெய்சூர் தாலுகா சக்தி நகரில் வசித்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி இவர்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சாவுடன் நாகை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பஸ்சில் ஏறி உள்ளனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகை தனிப்படை போலீசார், சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல்

விசாரணையில் அவர்கள், வேளாங்கண்ணியில் இருந்து 25 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கஞ்சாவுடன் நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் தங்கமாயன், மற்றும் அவரது மனைவி ஒச்சம்மாள், அய்யர்சாமி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரை செய்தார்.அதன் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை மாவட்ட சிறையில் இருந்த தங்கமாயன், ஒச்சம்மாள், அய்யர்சாமி ஆகிய 3 பேரையும் நாகை டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story