கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை அருகே குறிச்சிகுளம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் வெள்ளியப்பன் (வயது 30). இவர் திருமணம் ஆன பெண்ணை வெளியூருக்கு அழைத்து சென்றதால் அந்த பெண்ணின் உறவினர்கள் வெள்ளியப்பனை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். இதில் கைதான சங்கர்நகர் வடக்கு சிதம்பரநகரை சேர்ந்த பேச்சிராஜா (23), தச்சநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை செல்வகணபதி (23) ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தாழையூத்து செந்தில்நகரை சேர்ந்த நாகராஜன் (22), கரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த பூல்பாண்டி (22), விளாகம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (20), பிரமுத்துமணிகண்டன் (22) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.