5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொரடாச்சேரி:
அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரசியல் பிரமுகர் கொலை
திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். வளரும் தமிழகம் கட்சி பிரமுகரான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தன.
இவர் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேச.தமிழார்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்த கொலைக்கு பழிவாங்க கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி 10 பேர் கொண்ட கும்பலால் பூவனூர் ராஜ்குமார் படுகொலை செய்யப்பட்டார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த கொலை வழக்கு தொடர்பாக நடேச.தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி உள்பட 8 பேரை கொடராச்சேரி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் பாரதி மற்றும் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தை சேர்ந்த சூர்யா, அரசு, மாதவன், வீரபாண்டியன் ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார். இதன் மூலம் 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து கொரடாச்சேரி போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு சென்று கலெக்டரின் உத்தரவு நகலை அதிகாரிகளிடம் வழங்கினர்.