போதை மாத்திரை விற்றால் குண்டர் சட்டம் பாயும்போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பேட்டி
போதை மாத்திரை விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினாா்.
பவானி
பவானி அருகே உள்ள சித்தோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்தோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் 501- கிலோ குட்கா பொருட்களும், 240 கிலோ கஞ்சா சாக்லேட், ஒரு கார் ஆகியவற்றை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய வட மாநில குற்றவாளி தலராம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்.
மேலும், வேலை தேடி இங்கு வரும் வட மாநிலத்தவர்களை அழைத்து வரும் ஏஜெண்ட் மூலமாக யார் யார் எந்த பகுதியில் தங்கி உள்ளார்கள் என போலீசார் கணக்கெடுப்பு நடத்தி கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் போதை மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போதை மாத்திரை, கஞ்சா, குட்கா விற்பனை குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கு காவல்துறையின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார்.