சப்-இன்ஸ்பெக்டரை கத்தியைக் காட்டி மிரட்டிய கஞ்சா வியாபாரி கைது
வந்தவாசி அருகே சப்-இன்ஸ்பெக்டரை கத்தியைக் காட்டி மிரட்டிய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது வந்தவாசி- காஞ்சீபுரம் சாலையில் கல்லூரி முன்பு கஞ்சா விற்று கொண்டிருந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் பிடித்து விசாரித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த நபர் இடுப்பில் வைத்திருந்த கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டி தாக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், செய்யாறு தாலுகா மேல்மா கிராமத்தைச் சேர்ந்த ஓசூரான் (30) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள், சப்-இன்ஸ்பெக்டரை தாக்க பயன்படுத்திய கத்தி, அவருடைய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.