போலீஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்றவர் கைது
வீரபாண்டியில் போலீஸ்நிலையம் அருகில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார், வீரபாண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி போலீஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. அதை அவர் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த செல்வம் மகன் பாண்டீஸ்வரன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர். போலீஸ் நிலையம் அருகில் கஞ்சாவுடன் வாலிபர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடக்கிறது. எனவே, வீரபாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கவும், திருவிழா காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.