ரெயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
சேலத்தில் ரெயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்
சேலத்தில் ரெயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ரெயிலில் கஞ்சா கடத்தல்
வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று பாலமுருகன், பாலசுப்பிரமணி, இசையரசு, அசோக்குமார் ஆகியோர் கொண்ட ரெயில்வே போலீஸ் தனிப்படையினர் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 13351) சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது ஜோலார்பேட்டை சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்றது. அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். இதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த பையை கொண்டு வந்தது யார்? என சக பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரள வாலிபர் கைது
விசாரணையில் ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது கேரள மாநிலம் பாலக்காடு கைபுரம் பகுதியை சேர்ந்த சாய்புதின் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த கடத்தல் தொடர்பாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.