உணவகங்களில் சேரும் குப்பைகள் கூடுதல் கட்டணத்துடன் அகற்ற முடிவு


உணவகங்களில் சேரும் குப்பைகள் கூடுதல் கட்டணத்துடன் அகற்ற முடிவு
x

உணவகங்களில் சேரும் குப்பைகள் கூடுதல் கட்டணத்துடன் அகற்றப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சண்முக பழனியப்பன், செயலாளர் ராஜா, பொருளாளர் ஜெகதீசன், கர்ணன் உள்பட சங்க நிர்வாகிகள் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

உணவகங்களில் அன்றாடம் சேரக்கூடிய குப்பைகள் மற்றும் இலைகளை இதுநாள் வரை நகராட்சியின் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதற்கு நாங்கள் மாதந்தோறும் டீக்கடைகள், கேண்டீன்களுக்கு ரூ.100-ம், ஓட்டல்களுக்கு ரூ.500 வீதம் கட்டணம் செலுத்தி வருகிறோம். தற்போது நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதை நிறுத்துவதாகவும், அவரவர் குப்பைகளை அவரவரே அள்ளி அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். நாங்களே குப்பைகளையும் அப்புறப்படுத்துவது என்றால் எங்களால் ஓட்டல் தொழில் நடத்த முடியாது. எனவே குப்பை கட்டணத்தை, டீக்கடை மற்றும் கேண்டீன்களுக்கு மாதம் ரூ.300 வீதமும், ஓட்டல்களுக்கு ரூ.750 வீதமும் கட்டணம் நிர்ணயித்து, தொடர்ந்து குப்பைகளை அள்ள உத்தரவிட வேண்டும். மேலும் எங்கள் உறுப்பினர்களுக்கு லைசென்ஸ் பணம் பெற்றுக் கொண்டு, உரிய ரசீது வழங்கப்படவில்லை என்று புகார் வந்துள்ளது. அதையும் விசாரித்து, பணம் கட்டியவர்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் நாகராஜன் தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வழக்கம்போல் உணவகங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவது, இரவு 10 மணியளவில் லாரிகள் மூலம் அகற்றுவது. அதற்காக உணவகங்கள் சார்பில் தற்போது உயர்த்தி வழங்கப்படும் கட்டணங்களை பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.


Next Story