சின்ன லத்தேரி கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது


சின்ன லத்தேரி கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது
x

சின்னலத்தேரி கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அக்கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 351 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

குப்பை கிடங்கு

கூட்டத்தில் காட்பாடியை அடுத்த சின்னலத்தேரி கிராம மக்கள் அளித்த மனுவில், லத்தேரி ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பலர் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது எங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அருகே நீரோடை உள்ளது. இங்கு குப்பை கிடங்கு அமைத்தால் நீர்நிலைகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சின்னலத்தேரியில் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.

பள்ளிகொண்டாவை அடுத்த ஈடியர்பாளையத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழு ஒன்று உள்ளது. அதில் நாங்கள் உறுப்பினர்களாக உள்ளோம். இந்தக்குழுவின் முக்கிய நிர்வாகிகள், குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர்களின் பெயரில் பலரிடம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட சில நாட்களில் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மருத்துவ சேவை புறக்கணிப்பு

வேலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மனோகரன் தலைமையில் பொதுச் செயலாளர்கள் ஜெகன்நாதன், பாபு, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு ராஞ்சியில் ஏழை, எளிய மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த திட்டத்தை இணைக்காமல் அந்த சேவையை புறக்கணித்து வருகிறது. இதனை ஆய்வு செய்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023-ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவலத்தை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவிற்கு வழங்கினார். அந்த விருது, சான்றிதழை கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் நேற்று திருநங்கை ஐஸ்வர்யா காண்பித்து வாழ்த்து பெற்றார்.


Next Story