சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எரியூட்டப்படும் குப்பைகள்


சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எரியூட்டப்படும் குப்பைகள்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் குப்பைகள் எரியூட்டப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் குப்பைகள் எரியூட்டப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீ வைத்து எரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப்படும் குப்பைகள் குறிப்பிட்ட இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினந்தோறும் ஊராட்சி தூய்மை பணியாளர்களால் வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முக்கியமான சில பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அந்த இடத்திலேயே எரியூட்டப்பட்டு வருவதால் சுற்றுப்புற சுகாதாரத்தை பெரிதும் பாதித்து வருகிறது.

கொள்ளிடத்திலிருந்து, மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் ரெயில் நிலையம் அருகே நீர்வளத்துறை அலுவலகம், பயணியர் விடுதி மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அடுத்தடுத்து ஒரே பகுதியில் அமைந்துள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆகியவையும் அருகருகே அமைந்துள்ளன. ஆனால் அந்த முக்கிய இடத்தில் சாலையோரம் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகளை உரிய இடத்திற்கு சேகரித்து எடுத்து செல்வதற்கு முன்பாகவே இரவு நேரங்களில் தீ வைத்து எரித்து விடுகின்றனர்.

கோரிக்கை

இந்த குப்பை குவியலில் அதிகபட்சமாக பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள்,டயர்கள் உள்ளிட்ட மக்காத பொருட்கள் இருந்து வருகின்றன. இதிலிருந்து தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை அப்பகுதியில் உள்ளவர்களை பெரிதும் பாதிக்கிறது. குடியிருப்புகளில் உள்ளவர்களும்,அங்குள்ள அலுவலகங்களுக்கு செல்பவர்களும் நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த புகையால் சுவாசக்கோளாறு,நுரையீரல் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் உள்ளது என்றும் அரசு டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆன்மீக பேரவை தலைவர் பட்டுரோஜா கூறுகையில், முக்கியமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அவைகள் எரியூட்டப்பட்டு வருவதால் நச்சுத்தன்மை வாய்ந்த புகை அனைவரையும் பாதித்து வருகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகள் எரியூட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story