குப்பைகளை தரம் பிரிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் தரம் பிரிப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் தரம் பிரிப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைக்கிடங்கு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் 21 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. தஞ்சை மாநகரில் உள்ள 51 வார்டுகளில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை உரமாக
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் குப்பைகள் குவிந்து வந்ததால் மறுசுழற்சி முறையில் குப்பைகளை தரம் பிரிக்க தஞ்சை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதன் படி தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள குப்பைகளை தினமும் எந்திரங்களின் மூலம் சாக்குகள், தேங்காய் சிரட்டைகள், ரப்பர்கள், பாலித்தீன் பைகள், டயர்கள், தேங்காய் நார்கள், இரும்புகள், செருப்புகள், பேனாக்கள், துணிகள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது. எல்லா பொருட்களும் தரம் பிரிக்கப்பட்டு குப்பையில் உள்ள மக்கிய மண் மூலம் இயற்கை உரமாக தயாரிக்கப்படுகிறது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
இந்தநிலையில் தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது சுகாதார வளாகம் உள்ளது. தஞ்சை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொது சுகாதார வளாகத்தில் மூட்டைகளாக கட்டப்பட்டு தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அருகிலேயே பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ-மாணவிகள் துர்நாற்றத்தால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு மூட்டையாக கட்டப்படுவதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.