மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்


மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
x

கொடைக்கானல் அருகே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெருமாள்மலை, அடுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையோரத்தில், பெருமாள்மலை அருகே வனப்பகுதியையொட்டி உள்ள இடத்தில் கொட்டப்படுகின்றன.

இதேபோல் அப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், இறைச்சி கழிவுகளும் அங்கு கொட்டப்படுகிறது. சிலர் மருத்துவ கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இங்குள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ம‌லைபோல் அங்கு குப்பை குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

குப்பைகளில் இருந்து ஈக்கள் உருவாகி நோய் பரவும் சூழல் உள்ளது. துர்நாற்றத்தால் அந்த இடத்தை கடந்து செல்லும் போது சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதி அருகே தொட‌ர்ந்து குப்பைகள் கொட்டப்ப‌டுவதால் அவற்றை தின்று மான், காட்டெருமை, பன்றி, குர‌ங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காற்று வீசும்போது, மலைப்பாதைக்கு குப்பைகள் பறந்து வருகின்றன. எனவே பெருமாள்மலை அருகே குப்பைகள் கொட்டி வரும் இடத்தினை மாற்ற வேண்டும் என்றும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என குப்பைகளை பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story