பழனியில் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் குப்பைகள் தேக்கம்; கவுன்சிலர்கள் குற்றம்சாட்டு
பழனி நகராட்சியில் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் குப்பைகள் தேக்கம் அடைகின்றன என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
பழனி நகராட்சியில் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாததால் குப்பைகள் தேக்கம் அடைகின்றன என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
நகராட்சி கூட்டம்
பழனி நகராட்சி கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் ராமர், பொறியாளர் வெற்றிசெல்வி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் தீனதயாளன் (தி.மு.க.): தூய்மை பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் பழனி நகரில் குப்பைகள் தேக்கம் அடைகிறது. எனவே தூய்மை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். குப்பை சேகரிக்கும் வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும்.
நகர்நல அலுவலர்: தூய்மை பணியாளர்கள் நியமிக்கவும், வாகனங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஜென்னத்துல் பிர்தவுஸ் (அ.தி.மு.க.):- 25-வது வார்டு சூளைமேட்டு தெருவில் சுகாதார நிலைய விரிவாக்கத்துக்காக கழிப்பறை அகற்றப்படுவதை ரத்து செய்ய வேண்டும். கழிப்பறையை கட்டிவிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நகர்நல அலுவலர்: சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பட்டத்து விநாயகர் கோவில் அருகே உள்ள காலியிடத்தில் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வினியோகம்
சாகுல் அமீது (தி.மு.க.): பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களின் நிலை என்ன?. மேலும் கடந்த ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 மின்மோட்டார்கள் எங்கே?
பொறியாளர்: பழைய நாற்காலி, மேஜைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. அது மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மின்மோட்டார்கள் அனைத்தும் நகராட்சி நீரேற்றும் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
செபாஸ்டின் (தி.மு.க): பழனியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. நள்ளிரவு வேளையில் குடிநீர் விடப்படுகிறது. மின்சார தடையால் குடிநீர் வினியோகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.
பொறியாளர்: சீரான குடிநீர் வினியோகத்துக்கு புதிய ஜெனரேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (தி.மு.க.): பழனியில் பாதாள சாக்கடை திட்டத்தின் நிலை என்ன?
தலைவர்: பாதாள சாக்கடை திட்டத்துக்காக கோவில் நிர்வாகத்திடமும் நிதி பெற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நிதிபெறும் பணிகள் முடிந்தால் விரைவில், சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
கண்காணிப்பு கேமரா
முருகானந்தம் (அ.தி.மு.க.): பழனி தபால்நிலைய சாலையில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இருளில் மூழ்கி உள்ளது.
தலைவர்: விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (தி.மு.க.): பஸ்நிலைய தற்காலிக கடைகளுக்கு எவ்வாறு வாடகை நிர்ணயம் செய்தீர்கள். நகராட்சி கூட்டத்தில் தெரியப்படுத்தப்படவில்லையே ஏன்?
தலைவர்: இதுதொடர்பான தீர்மானம் ஒத்தி வைக்கப்படுகிறது.
பின்னர் 31-வது வார்டில் அடிக்கடி குற்ற சம்பவம் நடப்பதால் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கவுன்சிலர் தீனதயாளன் தீர்மானம் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆணையர்: நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு 'நமக்கு நாமே' திட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முக்கியஸ்தர்களிடம் உதவி பெறலாம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.