பராமரிக்காமல் விடப்பட்ட தோட்டங்கள்; தொழிலாளர்கள் வேலையிழப்பு
பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்காமல் விடப்பட்டு உள்ளன. மேலும் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்.
கூடலூர்,
பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்காமல் விடப்பட்டு உள்ளன. மேலும் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக தேயிலை சாகுபடி உள்ளது. பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை விலை கிடைத்து வந்தது. தற்போது பச்சை தேயிலையின் விலை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தோட்டங்களை பராமரிக்க முடியாமல் சிறு விவசாயிகள் முதல் பெரிய தோட்ட நிர்வாகங்கள் வரை திணறி வருகிறது.
பச்சை தேயிலைக்கு விலை கிடைக்காததால் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பச்சை தேயிலை அறுவடை பணியில் ஈடுபட்ட உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பச்சை தேயிலை கிலோ ரூ.11 முதல் ரூ.13 வரை மட்டுமே கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்கள் வேலையிழப்பு
இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதேபோல் தேயிலை தோட்டங்களில் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. சில தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்காததால் செடிகள் கவாத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் பகுதியில் பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத சூழலில், கூட்டுறவு தொழிற்சாலையில் புதிய எந்திரம் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான தோட்டங்களில் பச்சை தேயிலை முதிர்ச்சி அடைந்து உள்ளன. மேலும் தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பச்சை தேயிலை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. தொழிலாளர்கள் சம்பளம், உர விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வருவாய் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில்லை. அவ்வாறு அவர்கள் பணிக்கு வந்தாலும் பச்சை தேயிலையை தொழிற்சாலை நிர்வாகம் கொள்முதல் செய்வதில்லை. இதனால் தேயிலை விவசாயம் மிகவும் நலிவடைந்து வருகிறது. எனவே, உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.