திருவொற்றியூர், மணலியில் வாயு கசிவு: ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு
திருவொற்றியூர், மணலியில் வாயு கசிவு: ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு -தமிழக அரசு அறிவிப்பு.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி தொழிற்சாலை பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களில் எரிவாயு காற்றில் பரவி வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு வாயு கசிவு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்த தொழில்நுட்பக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்தக்குழுவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் சிவதாணு பிள்ளை, கோகுல், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குனர் வரலட்சுமி, சென்னை ஐ.ஐ.டி. சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள ஆதார பொறியியல், கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் எஸ்.எம்.சிவநாகேந்திரா, அண்ணா பல்கலைக்கழக வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் என்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்தக்குழு உடனடியாக மணலி மற்றும் திருவொற்றியூர் தொழிற்பகுதிகளில் ஆய்வு செய்து 2 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.