விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு?


விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு?
x

விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள சின்னரெட்டியபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 65), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகின்றனர். இவரது மனைவியும் பெங்களூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் தனது தோட்டத்து வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென 'டமார்' என்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த வேல்முருகன், வீடு தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக வீட்டைவிட்டு அவர் வெளியேறினார்.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வேல்முருகனின் உறவினர்கள் வீட்டருகே உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் துறை உதவி இயக்குனர் சங்கர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு கிடந்த சணல் திரிகள், உடைந்த பாட்டில் துண்டுகள் ஆகியவற்றை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தார். சணல் திரிகளும், பாட்டில் துண்டுகளும் இருந்ததால் வேல்முருகனின் வீட்டில் யாரேனும் பெட்ரோல் குண்டை வீசி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வேல்முருகனின் வீட்டில் இருந்த கட்டில், டி.வி, மின்விசிறி உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன.


Next Story