என்.எல்.சி. பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்நெய்வேலி பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேச்சு


என்.எல்.சி. பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்நெய்வேலி பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேச்சு
x

என்.எல்.சி. பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று நெய்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேசினார்.

கடலூர்

நெய்வேலி,

பேரணி

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராம மக்கள் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நெய்வேலியில் பேரணி மற்றும் மத்திய பேருந்து நிலையம் எதிரே பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

இதையொட்டி, நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து பேரணி தொடங்கியது. இதில் என்.எல்.சி.யில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பேரணியானது, தொ.மு.ச. அலுவலகம் வழியாக மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

பொதுக்கூட்டம்

தொடர்ந்து அங்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை.வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 17 அம்ச கோரிக்கைளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம்.

கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தோடு பிரச்சினை ஏற்பட்ட போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, பிரச்சினைகளை பேசி தீர்த்து வைத்தார். தற்போது, இங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களது பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இதன் மூலம் விவசாயிகள் வாழ்வில், அவர்களது வயிற்றில் பால்வார்க்கும் வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைக்கும்.

மக்களை மிரட்டினால்...

காவல்துறை, வருவாய்த்துறையை கொண்டு மக்களை மிரட்டி நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நிலையை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட வேண்டும்.

மக்களை மிரட்டினால், இங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வருவார்கள் என்கிற அச்சம் என்.எல்.சி.க்கு ஏற்பட வேண்டும் என்ற காரணத்துக்காகவே பொதுக்கூட்டம், பேரணி நடத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், என்.எல்.சி. நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்குவதில்லை. என்.எல்.சி. நிறுவனத்தை மூட வேண்டும் என்று பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்தப் போவதாக சொல்லி உள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தினால் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படும்.

என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இழப்பீட்டு தொகையும், வேலை வாய்ப்பும் வழங்க அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முத்தரசன்

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், என்.எல்.சி. நிலம் கொடுத்த மக்களை வஞ்சித்து வருகிறது. தற்போது கூட்டணி அமைத்துள்ள இந்த அமைப்பு விவசாயிகளின் தொழிலாளர் நலனை காக்க தொடர்ந்து போராடும். என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ராமமூர்த்திக்கு நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், அறிவழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் சவுதி ராஜ்குமார், நெய்வேலி தொகுதி செயலாளர் அதியமான், மாவட்ட துணை அமைப்பாளர் ஆடூர் அகரம் சின்னா என்கிற சின்னராஜ், விவசாயிகள் சங்கம் குப்புசாமி, மற்றும் காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பினர், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் மணிவாசகம் நன்றி கூறினார்.


Next Story