பாட புத்தகங்களோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
பாட புத்தகங்களோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
கள்ளக்குறிச்சி
கலந்துரையாடல் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 150 மாணவிகளுக்கு ஆளுமை திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமாருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்கள் பணியாற்றும் பல்வேறு வேலைவாய்ப்பு துறைகள் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
புதுப்புது விஷயங்களை...
பின்னர் அவர் கூறும்போது, மாணவிகள் எதிர்காலம் குறித்த கனவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே அழியாத செல்வம். எனவே கல்விக்கு முக்கியத்துவம் அளித்து புரிந்து கொண்டு படிக்க வேண்டும். என்னைப்போல் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல உயர் பதவிகளுக்கு செல்லும் வகையில் பள்ளிகளில் இருந்தே அதிகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாட புத்தகங்களோடு பொது அறிவை வளர்த்துக்கொள்ள தினசரி நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அடிப்படை வசதிகள்
தொடர்ந்து மாணவிகள் பேசும்போது, கல்வராயன்மலைப்பகுதிக்குட்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதி, உணவு அருந்துவதற்கு கட்டிட வசதி, கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்ல பஸ்வசதி, குடிநீர், சாலை, மின்விளக்கு, பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் கதிர்சங்கர், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மகாத்மா காந்தி தேசிய திறன் வளர்ப்பு திட்ட பயிற்சி மாணவி சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
செயல் விளக்கம்
முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயணைப்புதுறையின் நடைமுறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கணினி பற்றிய அடிப்படை புரிதல் பெற ஏ.கே.டி.பள்ளியில் கணினி பயிற்சியும், வங்கிகள் அதனுடைய தினசரி செயல்பாடுகள், சேமிப்பு கணக்கு தொடங்குதல், வங்கியின் அவசியம், அதன் தேவைகள் பற்றிய முக்கிய தகவல்களை நேரடியாக கற்பிக்கும் நோக்கத்துடன் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.