விழுப்புரத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் திடீர் ஆய்வு செய்தார்.
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று சிறப்பு ரெயில் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளுக்கு ரெயில் பயணம் பாதுகாப்பான பயணமாக அமைவது குறித்து விழுப்புரம் பகுதியில் தண்டவாளங்கள் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்றும், ஏதேனும் அதிர்வுகள் தென்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிக்னல்கள் செயல்படும் விதம், பாயிண்ட் போடும் முறைகள், ரெயில்வே நிலையங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர், விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி வரை ஆய்வுப்பணியை மேற்கொண்டார். முன்னதாக திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் விழுப்புரம் வருகை தந்தார். அவர், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி மற்றும் பயணிகள் தங்கும் அறை போன்ற வசதிகள் அனைத்தும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து பயணச்சீட்டு வழங்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் உடனுக்குடன் பயணச்சீட்டு வழங்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார். மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகளை ஆய்வு செய்த அவர், தரமான முறையில் லிப்ட் அமைக்குமாறும், அப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் ரெயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.