சுருளியாறு மின் நிலையத்தில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி
கூடலூர் அருகே சுருளியாறு மின் நிலையத்தில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.
கூடலூர் அருகே சுருளியாறு மின் நிலையத்தில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.
மின் உற்பத்தி நிலையம்
கூடலூர் அருகே சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்திக்காக மேகமலை வனப்பகுதியில் உள்ள இரவங்கலாறு அணையில் இருந்து மலைப்பாதை வழியாக 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு ராட்சத இரும்பு குழாய்கள் அமைத்து அதன் வழியாக தண்ணீா் கொண்டுவரப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த இரும்பு குழாயில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு, சேதமடைந்தது. இதனால் சுருளியாறு மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் இந்த பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் உடனடியாக குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. குழாய் சீரமைப்பு பணிகளை செய்ய வனத்துறை அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மீண்டும் தொடக்கம்
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்துக்கு செல்லும் குழாய்களை சீரமைக்க வனத்துறை அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ராட்சத எந்திரங்கள் மூலம் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. சமீபத்தில் குழாய்கள் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தது.
இதையடுத்து சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 23 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. தற்போது, மேகமலை அருகில் இரவங்கலாற்றில் நீர்வரத்து குறைவாக உள்ளதால் 20 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.