மரபியல் பல்வகைமை கண்காட்சி
தோட்டக்கலைத்துறை சார்பில் மரபியல் பல்வகைமை கண்காட்சி நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் 3-வது மரபியல் பல்வகைமை கண்காட்சி நெடுகுளா கிராமத்தில் நடைபெற்றது. கண்காட்சியை நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்பசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இதில் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், உருளைக்கிழங்கு ரகங்கள், பல்வகை மருத்துவ பயிர்கள், சிறுதானியங்களான ராகி, சாமை, திணை, வரகு, கம்பு காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மாணிக்கவாசகம் பூர்வீக பயிர்களின் மகத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். செம்மறியாடு இன விருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரேமா விவசாயத்தில் பாரம்பரிய கால்நடை இனங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். கோதுமை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி நஞ்சுண்டன் பாரம்பரிய சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் போஜன் ஆகியோர் பேசினர். முடிவில் கூடலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார். கண்காட்சியில் விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.