ஜெயங்கொண்டத்தில் மரபியல் பல்வகைமை கண்காட்சி; நாளை நடக்கிறது
ஜெயங்கொண்டத்தில் மரபியல் பல்வகைமை கண்காட்சி நாளை நடக்கிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பின் படி, அனைத்து மாவட்டங்களிலும் மரபியல் பல்வகைமை கண்காட்சி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பாரம்பரிய பயிர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழகம் முழுவதும் மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது மரபியல் பல்வகைமை கண்காட்சி நாளை (வியாழக்கிழமை) ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் உள்ள சி.ஆர். திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள், தோட்டக்கலை பயிர்கள், வேளாண் எந்திரங்கள், மற்றும் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கவுரையும் வழங்கப்பட உள்ளது. எனவே கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.