ஆணையாளரை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகரசபை கூட்டம்
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வருபவர் சந்திரா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நகரசபை கூட்டத்தின்போது ஆணையாளர் சந்திரா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. நகராட்சி ஆணையாளர் இல்லாமலேயே கூட்டம் நடந்தது. அப்போது கவுன்சிலர்கள் ஆணையாளர் குறித்து கேள்வி கேட்டபோது தலைவர் கார்மேகம் ஆணையாளர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. காணவில்லை. 19 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் மாயமாகிவிட்டார் என்று பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்தார்.
அவரை நகரசபை நிர்வாகத்தின் சார்பில் கண்டிக்க வேண்டும். அவரை மாற்ற வேண்டும் இப்படிப்பட்ட ஆணையாளரை வைத்துக்கொண்டு எப்படி மக்கள் பணி நிறைவேற்றுவது என்று கூச்சலிட்டனர். ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் எழுதி கொடுத்தால் உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று தலைவர் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடும் வாக்குவாதம்
இந்தநிலையில் விடுப்பில் சென்ற ஆணையாளர் சந்திரா நேற்று அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டார். இதுபற்றி அறிந்த தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 23 கவுன்சிலர்கள் அவரின் அறைக்கு சென்று முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகரசபை கூட்டம் நடைபெற்ற போது இவ்வாறு சொல்லாமல் கொள்ளாமல் தீர்மானங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் சென்றால் எப்படி மக்களின் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றுவது. தீர்மானம் நிறைவேறாததால் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் சப்ளை பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கண்டித்தனர்.
இதற்கு அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் நகரசபை பணியாளர்கள் தன்னிடம் கையெழுத்து வாங்கவில்லை என்றும் பணியாளர்கள் மீது குற்றம்சாட்டினார்.
திடீர் மயக்கம்
இதுதொடர்பாக நகரசபை பணியாளர் தவபாண்டி என்பவரை அழைத்து கவுன்சிலர்களின் முன்னிலையில் கண்டித்துள்ளார். நான் என்ன செய்வேன் என்மீது ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற தொனியில் வியர்க்க விறுவிறுக்க நின்ற தவபாண்டிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். இதுகுறித்து ஆணையாளர் சந்திராவிடம் கேட்டபோது, நான் எந்த தீர்மானங்களையும் ரத்து செய்யவில்லை. என்னிடம் முறையாக கையெழுத்து பெறவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வரவில்லை. தற்போது எனது கவனத்திற்கு வந்ததும் அந்த தீர்மானங் களுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். சிறப்பு கூட்டம் நடத்தி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினார்.