7 ஆண்டுகளாக கள்ளக்காதலியாக இருந்தேன்கட்டிட மேஸ்திரியிடம் நஷ்ட ஈடு வாங்கி கொடுங்கள்போலீசில் பெண் அளித்த புகாரால் பரபரப்பு
7 ஆண்டுகளாக கள்ளக்காதலியாக இருந்ததால் கட்டிட மேஸ்திரியிடம் இருந்து நஷ்ட ஈடு தொகை வாங்கி கொடுங்கள் என்று பெண் ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னங்குறிச்சி,
பெண் புகார்
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு நேற்று ஒரு பெண் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதை வாங்கி படித்தவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, கள்ளக்காதலனிடம் இருந்து நஷ்டஈடு தொகை வாங்கி கொடுக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசாரிடம் அந்த பெண் அளித்துள்ள மனுவில், நான் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு மேஸ்திரியிடம் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. தினமும் அவருடன் தான் வேலைக்கு சென்று வருவேன். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இது கள்ளக்காதலாக மாறியது.
மேஸ்திரியிடம் விசாரணை
சமீபத்தில் என் பெயரில் வங்கியில் கடன் வாங்கி அவருக்கு கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கி செலவு செய்துவிட்டு அவர் திருப்பி கொடுக்க வில்லை. எனவே, மேஸ்திரியிடம் இருந்து பணத்தை திருப்பி வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார், சம்பந்தப்பட்ட மேஸ்திரியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண்ணிடம் நான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாகவும், அவர் என் மீது வேண்டும் என்றே பொய் புகார் கூறுவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டவுடன் அந்த பெண்ணுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
நஷ்ட ஈடு தொகை
பின்னர் அவர் போலீசாரிடம் கூறும்போது, நான் 7 ஆண்டுகளாக அந்த மேஸ்திரிக்கு கள்ளக்காதலியாக இருந்து வந்தேன். தற்போது என்னை கழட்டிவிட்டு விட்டார். இதனால் எனக்கு நஷ்ட ஈடு வாங்கி கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறினார். இதை கேட்டவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கணவனுடன் மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றால் மனைவி ஜீவனாம்சம் கேட்பது வழக்கம். ஆனால் இங்கு கட்டிட மேஸ்திரியிடம் அவருடைய கள்ளக்காதலி நஷ்ட ஈடு தொகை கேட்பது புதிராக இருப்பதாக போலீசார் குழப்பம் அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, போலீஸ் நிலையம் முன்பு திரண்டிருந்த கட்டிட மேஸ்திரியின் உறவினர்களுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் கட்டிட மேஸ்திரி மற்றும் அவர் மீது புகார் கொடுத்த பெண் ஆகியோரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கன்னங்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.