சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் கந்தர்வகோட்டை வாலிபர்
சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் கந்தர்வகோட்டை வாலிபரை சொந்த ஊருக்கு அழைத்து வர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிரைவர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சுந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாரிமுத்து-அலமேலு. இந்த தம்பதியினரின் மகன் கண்ணன் (வயது 37). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றார். அங்கு ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்துள்ளார். தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
உணவின்றி தவிப்பு
அப்போது ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரால் விசா காலம் முடிந்து ஓராண்டுகள் ஆன நிலையிலும், இந்தியாவிற்கு வர முடியவில்லை. இதனால் அவர் தங்கியிருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் வேலைக்கும் செல்லவில்லை. பணிக்கு செல்லாததால் உணவு போன்ற அவருடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால் அவர் சவுதி அரேபியாவில் உணவின்றி மிகுந்த வேதனையில் தவித்து வருகிறார்.
கோரிக்கை
மேலும் வேலையின்றி இருப்பதால் தனது குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியாத காரணத்தால் அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே அவரை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என அவரது பெற்றோர், மனைவியும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.