ரேஷன் கடைகளில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் -விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு


ரேஷன் கடைகளில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் -விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு
x

ரேஷன் கடைகளில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

ரேஷன் கடைகளில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

விவசாயிகளிடம் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் கொள்முதல் செய்து அவற்றை ரேஷன்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பென்னாத்தூரில் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் 30-ந் தேதி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்துநேற்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விற்பனை செய்ய வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.75 அரசு வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு உழவரும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெரும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

நந்தன் கால்வாய் திட்டம்

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை நந்தன் கால்வாயுடன் இணைத்து நந்தன் கால்வாய் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்திய அரசு உழவர்களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும். தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் மாநிலங்களில் உள்ளதை போல் வருடம் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் வலியுறுத்தி இருந்தனர்.


Next Story