தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் ராட்சத தூண்கள் பொருத்தும் பணி
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் ராட்சத தூண்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ரெயில்வே மேம்பாலத்தில் ராட்சத தூண்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மேம்பாலம்
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை நாற்கர சாலையில் மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலத்தில் வலது பகுதி மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இடது புற சாலையில் பாலம் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் நடந்து வந்தன. இதனால் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கனிமொழி எம்.பி. மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் ரூ.9 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
ராட்சத தூண்
இந்த நிலையில் பாலத்தில் ராட்சத தூண்களை பொருத்தும் பணிகள் நேற்று தொடங்கி உள்ளன. இதற்காக 300 டன் எடையை தூக்கக்கூடிய அதிநவீன ராட்சத கிரேன்கள் நேற்று முன்தினம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் வேல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலையில் பணியை மேற்கொண்டனர். இதனால் தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் புதூர்பாண்டியாபுரம் முதல் இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா வரை உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 10 மணி அளவில் 80 டன் எடையுடன் சுமார் 100 அடி நீளம் கொண்ட ராட்சத தூணை பொருத்தும் பணி நடந்தது. மதியம் 1 மணி அளவில் ஒரு தூண் மட்டும் பொருத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மற்ற 4 தூண்களும் வரும் நாட்களில் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியின் போது, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், தனியார் நிறுவன திட்ட மேலாளர் சிங்காரவேலு, தங்கவேல், கள என்ஜினீயர்கள் கலைச்செல்வன், பிச்சாண்டி, ஓய்வு பெற்ற தாசில்தார் ராமசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.