98 மி.மீட்டர் மழைப்பதிவு: ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்தது-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


98 மி.மீட்டர் மழைப்பதிவு: ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்தது-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

ஏற்காட்டில் நேற்று முன்தினம் 98.2 மி.மீட்டர் மழைப்பதிவானது. மலைப்பாதையில் ராட்சத மரம் சரிந்து விழுந்ததால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம்

ஏற்காடு:

ஏற்காட்டில் கனமழை

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்தநிலையில் ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. மேலும் மேகமூட்டத்துடன், கடும் குளிர் நிலவியது.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஏற்காட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. இரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஏற்காட்டில் 98.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

ராட்சத மரம் விழுந்தது

இதனிடையே தொடர் மழையின் காரணமாக நேற்று காலை 9.30 மணிக்கு சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 18-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் சாலையின் நின்றவாறு ஏற்காடு அழகை கண்டு ரசித்தனர்.

போக்குவரத்து பாதிப்பால் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல், மாற்றுப்பாதையான குப்பனூர் வழியாக அவை திருப்பிவிடப்பட்டன.

2 மணி நேரம்

மரம் விழுந்தது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை, மின்சாரத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததாலும், கடும் மேகமூட்டம் நிலவியதாலும் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பின்னர் அவர்களுக்கு, பொதுமக்களும் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த உதவி செய்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மரம் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.

மண் சரிவு

இந்தநிலையில் மழை காரணமாக மலைப்பாதையில் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பயணித்தனர். மேலும் அடிவாரம் கருங்காளி மற்றும் கொலகூர், வாழவந்தி, குண்டூர், தலைசோலை ஆகிய பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் மழையால் சேதம் அடைந்தனர்.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு கிராமங்கள் இருளிள் மூழ்கின. ஏற்காடு 5 ரோடு மற்றும் நாகலூர் செல்லும் சாலையில் மரங்கள் மின் கம்பிகள் மீதும், ரோட்டின் குறுக்கேயும் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை அளவு

இதேபோல் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஏற்காடு-98.2, காடையாம்பட்டி-18.2, ஆனைமடுவு-14, ஓமலூர்-11.4, சேலம்-10.4, மேட்டூர்-6.2, எடப்பாடி-4.4, கரியகோவில்-3, ஆத்தூர்-2.4, சங்ககிரி-2, பெத்தநாயக்கன்பாளையம்-1.

சேலம் மாநகரை பொறுத்தவரை நேற்று காலை 9 மணி வரை லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. பின்னர் மதியம் வெயில் அடிக்க தொடங்கியது. சேலத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுவதால் கோட்டை பகுதியில் சாலையோர கடைகளில் ஸ்வெட்டர், ரெயின் கோட், கம்பளி உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


Next Story