பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
சுரண்டையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் ஆடவர் சுயஉதவிக்குழு சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார் தலைமை தாங்கினார். காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பீர் கான், சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் விஷாந்த், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரக்ஷித், சங்கரநாராயணன், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலை மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினர். தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுயஉதவிக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏ.எம்.சமுத்திரம், மாரியப்பன், ஆறுமுகசாமி, குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.