வனப்பகுதியில் இஞ்சி சாகுபடி


வனப்பகுதியில் இஞ்சி சாகுபடி
x

வனப்பகுதியில் இஞ்சி சாகுபடி

திருப்பூர்

தளி

வனப்பகுதியில் இஞ்சி சாகுபடியில் மலைவாழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதி

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி, குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, மேல் குருமலை, கருமுட்டி, முள்ளுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். இயற்கையோடு இணைந்து அதன் வளங்களை உரமாகக் கொண்டு காலம் காலமாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்துக்கு பிரதானமாக உள்ள தண்ணீரை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆறுகள் அளித்து வருகிறது. அதைக் கொண்டு இஞ்சி, நெல், தக்காளி, மிளகாய், பீன்ஸ், தென்னை, வாழை, மஞ்சள், பாக்கு, கேழ்வரகு, குருமிளகு, பூண்டு சாமை, திணை, சோளம், உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இஞ்சி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

கூடுதல் மகசூல்

வனப்பகுதியில் சமதள பரப்பு போன்று எளிதில் சாகுபடி பணியை மேற்கொள்ள இயலாது. கரடு முரடான பகுதிகளை பலமாத உழைப்பை கொட்டி ஓரளவிற்கு சமன் செய்து உழவுக்கு தயார்படுத்த வேண்டும். அதன் பின்பே நிலத்தை பக்குவப்படுத்தி சாகுபடி பணிகளை தொடங்க இயலும்.அதுவும் ஆறுகளில் நீர்வரத்து இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அந்த வகையில் தற்போது இஞ்சி சாகுபடி மேற்கொண்டு வருகிறோம். பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பெய்யும் கோடை மழைக்குப் பின்பு நிலத்தை உழுது பக்குவப்படுத்தி மே-ஜூன் மாதங்களுக்கு இடையில் சாகுபடியை தொடங்குகிறோம்.

மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. ஒரு எக்டருக்கு 1500 முதல் 1800 கிலோ இஞ்சி கருணைகள் விதைப்புக்கு தேவைப்படும். காய்கறி பயன்பாட்டிற்கு ஆறு மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். சுக்கு தயாரிக்க எட்டு முதல் ஒன்பது மாதங்கள் கழித்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறிய பின்பு அறுவடை செய்ய வேண்டும். தேவையான அளவு தண்ணீர், முறையான பராமரிப்பு, தருணத்தில் உரம் இடுதல் எனக்கு தீவிர கண்காணிப்பு இருந்தால் எக்டருக்கு 20 முதல் 25 டன் மகசூல் பெறலாம்.

ஜலதோஷம், தலைவலியை போக்குதல், ரத்த ஓட்டத்தை சீர்படுத்துதல், செரிமானத்தை சீராக்கி பசியை தூண்டுதல், உடல் உள் உறுப்புகளை சுத்திகரிப்பது, மலச்சிக்கலை மற்றும் பித்தத்தை நீக்குவது என பல்வேறு மருத்துவ குணங்கள் இஞ்சியில் நிறைந்து உள்ளது.இதன் காரணமாக அன்றாட உணவில் இஞ்சிக்கு முக்கியத்துவமும் முதன்மையும் உண்டு.இதனால் பொதுமக்கள் அன்றாட உணவில் இஞ்சியை முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதுமட்டுமின்றி இஞ்சி உள்ளிட்ட பல்வேறு வகையானயான காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்கு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.



Next Story