இஞ்சி கிலோ ரூ.260-க்கு விற்பனை பூண்டு விலையும் ரூ.200 ஆக உயர்வு
வாணாபுரம் பகுதிகளில் இஞ்சி கிலோ ரூ.260-க்கும் பூண்டு கிலோ ரூ.200-க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
வாணாபுரம்
வாணாபுரம் பகுதிகளில் இஞ்சி கிலோ ரூ.260-க்கும் பூண்டு கிலோ ரூ.200-க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ேநாய் எதிர்ப்பு சக்தி
அன்றாட சமையலில் இஞ்சி, பூண்டு முக்கிய இடம் வகிக்கிறது. இவை செரிமானத்துக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்தாகவும் விளங்குகிறது. சைவ உணவு பிரியர்கள் இதனை சிறிதளவு சேர்த்தாலும் அசைவ உணவு செய்பவர்கள் பூண்டு, இஞ்சி உள்ளிட்டவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அசைவ பிரியர்களின் மிக முக்கிய உணவாக பிரியாணி உள்ளது. இதில் அதிக அளவில் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக கசாயம் உள்ளிட்டவை வைப்பதற்கு அன்றாடம் இவை பயன்படுகிறது.
விலை நிலவரம்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட இஞ்சி கடந்த வாரம் ரூ.200-ஐ கடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக கிலோ ரூ.360-க்கு விற்கப்பட்ட இஞ்சி நேற்று ரூ.100 குறைந்து 260 ரூபாயாக விற்கப்பட்டது.
இதே போல் பூண்டு கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.40 ரூபாய் குறைந்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை ஓரளவிற்கு விலை கட்டுக்குள் வந்தாலும் பூண்டு, இஞ்சி உள்ளிட்டவைகளின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருவது மட்டுமல்லாமல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
காரணம் என்ன?
இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஞ்சி, பூண்டு, தக்காளி உள்ளிட்டவை திருவண்ணாமலை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவற்றை வாங்கி வந்து சில்லறையாக விற்று வருகிறோம்.
கடந்த சில மாதங்களாக அந்த மாநிலங்களில் பரவலாக கன மழை பெய்ததால் தக்காளி, இஞ்சி, பூண்டு விளைச்சல் குறைந்தது.
மேலும் அதிக அளவில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிரிடப்பட்ட இஞ்சி, பூண்டு தக்காளி உள்ளிட்டவைகள் அறுவடை செய்ய முடியாமல் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். இதனால்தான் இவற்றின் விலை இன்னும் குறையாமல் இருந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நிலை மாறும்'' என்றனர்.