திருவாரூருக்கு வரத்து குறைந்ததால் இஞ்சி விலை உயர்வு
அறுவடை பணி பாதிப்பால் திருவாரூருக்கு இஞ்சி வரத்து குறைந்தது. இதனால் இஞ்சி விலை உயர்ந்து 1 கிலோ ரூ.240-க்கு விற்பனையானது.
அறுவடை பணி பாதிப்பால் திருவாரூருக்கு இஞ்சி வரத்து குறைந்தது. இதனால் இஞ்சி விலை உயர்ந்து 1 கிலோ ரூ.240-க்கு விற்பனையானது.
காய்கறி மார்க்கெட்
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக திருச்சி, கும்பகோணம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.
வெங்காயம், தக்காளி, பச்சை, மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதில் இஞ்சியை பலவகையான உணவு பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்துகிறார்கள். உணவில் இஞ்சியை சிறிது சேர்த்து கொண்டால் ஜீரண பிரச்சினைகள் சரியாகும். திருவாரூருக்கு திருச்சி, கும்பகோணம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் இருந்து இஞ்சி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
1 கிலோ ரூ.240-க்கு விற்பனை
கடந்த சில நாட்களுக்கு முன்பு இஞ்சி விலை கிலோ ரூ.80 வரை விற்பனையானது. மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்தது. மேலும் இஞ்சி விளையும் இடங்களில் கனமழை நீடிப்பதாலும், இஞ்சி அறுவடை செய்ய ஆட்கள் வராத காரணத்தாலும் அதன் வரத்து குறைந்துள்ளது.
இதனால், விலை அதிகரித்து தற்போது 1 கிலோ இஞ்சி ரூ.240-க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'அனைத்து அசைவ உணவு வகை தயாரிப்பலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. ஓட்டல்கள், தேநீர் கடைகள் என பல தரப்பினரும் இஞ்சியை தினமும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியை பொருத்தவரையில் மழையின் காரணமாகவும், அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும் விலை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்து விட்டதால் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையான இஞ்சி தற்போது ரூ.240 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.