அரூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து,வரதட்சணை கொடுமை-கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு


அரூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து,வரதட்சணை கொடுமை-கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து, வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறுமிக்கு திருமணம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஸ்ரீதர் (வயது 20) காதலித்தார். இதையறிந்த ஸ்ரீதரின் பெற்றோர், அந்த சிறுமியை பெண் கேட்டு சென்றனர். 18 வயது பூர்த்தி அடையாததால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அப்போது திருமணம் செய்து கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். இதனால் மனதை மாற்றி கொண்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியை ஸ்ரீதருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வரதட்சணை கொடுமை

இந்தநிலையில் ஸ்ரீதரின் பெற்றோர் சிறுமியிடம் வரதட்சணை கேட்டு உள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு 5 பவுன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை சிறுமியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் அந்த வரதட்சணை போதவில்லை என்று கூறி சிறுமியை, கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுமி, அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கணவர் தன்னையும், தனது குழந்தையும் கவனிக்கவில்லை. சிறு வயதிலேயே திருமணம் செய்து என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். எனவே இது தொடர்பாக கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

7 பேர் மீது வழக்குப்பதிவு

இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவின் கீழ் ஸ்ரீதர், அவருடைய பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story